புத்தாண்டிலும் தொடரவுள்ள போராட்டம்

புத்தாண்டிலும் தொடரவுள்ள போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி தமிழ், சிங்களப்புத்தாண்டுக்கொண்டாட்டமான நாளைய தினமும் (14)  நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களும், அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி நாடளாவிய ரீதியில் தம்புள்ளையில் மு.ப 9 மணிக்கும், குருணாகலில் மு.ப 11 மணிக்கும், அம்பேபுஸ்ஸவில் நண்பகல் 12 மணிக்கும் கடவத்தapல் பி.ப 1.30 மணிக்கும், பருத்தித்துறையில் பி.ப ஒரு மணிக்கும், கிளிநொச்சியில் பி.ப 3 மணிக்கும், வவுனியாவில் பி.ப 5 மணிக்கும், அநுராதபுரத்தில் பி.ப 7 மணிக்கும், காலிமுகத்திடலில் பி.ப 3 மணிக்கும் ‚கோட்டா கோ ஹோம்‘ (வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா) என்ற கோஷத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேபோன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்றைய தினம் (13)  காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதுடன் நாட்டின் அரசியல் நிலைவரம், அரசியலமைப்பு, போராட்ட வரலாறு ஆகிய விடயங்கள் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் வகையிலான உரைகளும் இடம்பெறவுள்ளன.

நாளைய தினம் (14) காலை 8.41 மணிக்கு அனைத்து பாரம்பரிய முறைப்படி பால் காய்ச்சப்படும் என்றும், அதற்கு வருகைதருபவர்களை மஞ்சள்நிற ஆடையணிந்துவருமாறும் சமூக செயற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

அத்தோடு இனங்களுக்கு இடையிலான ஒருமைப்பாட்டைக் காண்பிப்பதே இதன் நோக்கம் என்றும், மாறாக இதுவோர் கொண்டாட்டம் அல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராஜபக்ஷாக்களின் ஆட்சியை முடிவிற்குக்கொண்டுவருவதை இலக்காகக்கொண்டு தமிழ், சிங்களப்புத்தாண்டு தினமான நாளை (14) காலை 8.41 மணிக்கு நாட்டுமக்கள் அனைவரும் தேங்காய் உடைத்துப் பிரார்த்திக்குமாறும் சமூகவலைத்தளங்களில் சிலர் பதிவுகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகள்