ஏ.சி. வெடித்து தீப்பிடித்த வீடு … ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

ஏ.சி. வெடித்து தீப்பிடித்த வீடு … ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

விஜயநகரில் ஏ.சி. வெடித்து வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டே தாலுகா மரியம்மனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திர ஷெட்டி. இவரது மனைவி ராஜஸ்ரீ. இவர்களுடன் இவர்களது மகன் வெங்கட் பிரசாந்த்(வயது 42), அவரது மனைவி சந்திரகலா(38), பேரன் அர்த்விக்(16), பேத்தி பிரேரானா(14) ஆகியோரும் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் அனைவரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். கீழ் தளத்தில் படுக்கை அறையில் ராகவேந்திரா ஷெட்டியும், அவரது மனைவி ராஜேஸ்வரியும் தூங்கினர். மேல் தளத்தில் உள்ள படுக்கை அறையில் வெங்கட் பிரசாந்த் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கினார்.

இந்த நிலையில் நள்ளிரவு 12.45 மணியளவில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்து உள்ளது. மேலும் தீ வீடு முழுவதும் பரவி எரிய ஆரம்பித்தது. இதனால் விழித்தெழுந்த ராகவேந்திர ஷெட்டியும், அவரது மனைவி ராஜஸ்ரீயும் பதறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.

அதேபோல் வெங்கட் பிரசாந்த் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வர முயன்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் வீடு முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அங்கிருந்த ஏ.சி. எந்திரமும் வெடித்தது. இதனால் தீயில் சிக்கிய வெங்கட் பிரசாத், அவரது மனைவி சந்திரகலா, மகன் அர்த்விக், மகள் பிரேரானா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியையே உலுக்கியது. மேலும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதற்கிடையே சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உடனடியாக அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி அணைத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மரியம்மனஹள்ளி போலீசார், வெங்கட் பிரசாந்த் உள்பட 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

இந்தியா