சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்

சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்

சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றின் குளியலறையிலிருந்து ஒரு பெண் அலறியதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் பொலிசாரை அழைத்துள்ளார்.

பொலிசார் வந்து அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, அந்த வீட்டின் குளியலறையில் தண்ணீர் வெளியேறும் துவாரத்துக்குள் விரல் சிக்கிக்கொள்ள, அந்தப் பெண் உதவி கோரி சத்தமிட்டது தெரியவந்தது.

பொலிசார் சோப் உதவியுடன் அவரது விரலை வெளியே எடுக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடையவே, அவர்கள் தீயணைப்புத் துறையினரை அழைத்துள்ளனர்.

தீயணைப்புத் துறையினர் தக்க உபகரணங்களுடன் வந்து இரண்டு மணி நேரம் போராடி அந்தப் பெண்ணின் விரலை விடுவித்துள்ளனர்.

சூரிச்சுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள Winterthur நகரில் வாழும் அந்த 50 வயதுப் பெண், தனது விரல் பத்திரமாக விடுவிக்கப்பட்டதால் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லையாம்.

இப்படிப்பட்ட ஒரு சம்பவம் இதுவரை நடந்ததாக தங்களுக்கு நினைவில்லை என்று கூறியுள்ள Winterthur நகர பொலிசார், ஆனாலும், அக்கம்பக்கத்து வீடுகளில் ஏதாவது பிரச்சினை என்பது போலத் தோன்றினால் பொலிசாருக்குத் தகவலளிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.  

உலகம்