தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு எதிராக வாசகம்!

தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு எதிராக வாசகம்!

அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்னால் இந்த வாசகம் பொறிக்கப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.
இலங்கைப் போக்குவரத்துச் சபையால் மத்துகம டிப்போவிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த பேருந்து சிங்கள மொழியில் இப்படி இனத்துவேசத்தை கக்கும் வாசகத்தை கக்கியபடி நாளாந்தம் பயணிக்கிறது.

மத்துகம பகுதியானது சிங்களவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழும் பிரதேசம். இந்த பஸ் வண்டியும் கூட களுத்துறை, அளுத்கம, மத்துகம பகுதியில் சேவையில் உள்ள பேருந்து.

அது மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகமாக ஊட்டப்பட்ட பிரதேசம். 2014 ஆம் ஆண்டு ஞானசார தேரர் உள்ளிட்டோரால் ஏற்படுத்தப்பட்ட கலவரம் இந்தப் பகுதியில் தான் நிகழ்ந்தது.

எப்போதும் ஒரு கெடுபிடி நிலை தொடரவே செய்யும் பகுதிகள் இவை.

அங்கு வாழும் முஸ்லிம் மக்களை எச்சரிப்பதற்காகவே இந்த “ஒட்டகங்களை அடங்கியிருக்கச் சொல்லும்” எச்சரிக்கை.

தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதாக முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தும் அதேவேளை முஸ்லிம்கள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடங்கியிருக்க தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கையை விடுக்கிறது.

அதுவும் அரச போக்குவரத்து வண்டியில் போக்குவரத்து சபையால் பொறிக்கப்பட்டிருகிறது. மதுகம டிப்போவுக்கு சொந்தமான 9532 இலக்கமுடைய பஸ்ஸிலேயே தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்த வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.

கோத்தபாய ஆட்சியமர்ந்தபின்னர் மிகவும் துணிச்சலாகவே பேரினவாத சக்திகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள அரச நிறுவனங்களை ஏனைய இனங்களுக்கு எதிராக பயன்படுத்திவருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இது போன்ற விடயங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே பேரினவாதத்தின் அமுலாக்கத்துக்கு எதிராகவும், அதன் நிறுவனமயப்படுத்தலுக்கு எதிராகவும் வெகுஜன கூட்டு மனநிலையை கட்டியெழுப்ப முடியும்.

செய்திகள்