கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்!

கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்!

மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாகக் கூறும்  சிறிலங்கா ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்றுப் பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பாக காலியில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மிக விசேடமாகச் சொன்ன விடயங்களைப் பார்த்தால், தன்னை மக்கள் ஜனாதிபதியாக வருமாறு விடுத்த அழைப்பினை ஏற்றே தான் ஜனாதிபதியாக அரசியலுக்கு வந்ததாக அவர் சொல்லியிருந்தார்.

அது ஒரு அளவிற்கு தெற்கிலே இந்த மக்கள் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தமை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஜனாதிபதி மக்களுடைய கோரிக்கைக்கு இணங்கவே அரசியலுக்கு வந்தார் என்று சொன்னால், இன்று மக்களுடைய கோரிக்கைக்கு இணங்கி அவர் பதவி துறந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

இன்று அனைத்து பிரதேசங்களிலும் “GO HOME GOTA“ என்று சொல்லும் ஒரு நிலையில், அவர் மக்களினுடைய கருத்தினைக் கேட்டு அரசியலுக்கு வந்தவர், மக்களுக்காக அரசியலுக்கு வந்தவர் என்று சொன்னால், இன்று மக்கள் என்ன கேட்கின்றார்கள் என பார்த்தால் அவரை வீட்டுக்குச் செல்லுமாறு கேட்கின்றனர்.

ஆகவே அந்த அடிப்படையில் அவர் இன்று தனது பதவியினை இராஜினாமா செய்து விட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் உதவியினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் தனது உரையில் தெரிவித்திருந்தார். இதனையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

அத்துடன், அவரால் இந்த நாட்டினை சிறந்த முறையிலே நடத்த முடியாது. இந்த நாட்டில் ஜனாதிபதியின் சுபீட்சமான நோக்கம் என எதுவும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள்