பெற்ற கடனை திருப்பிபெற‌ தந்தையும் பிள்ளைகளும் கடத்தல்!!

பெற்ற கடனை திருப்பிபெற‌ தந்தையும் பிள்ளைகளும் கடத்தல்!!

கொடுக்கல் – வாங்கல் தகராறினால் தந்தையையும், பிள்ளைகள் இருவரையும் கடத்திய கும்பலை சேர்ந்த 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றில் அடைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தந்தையும், இரு பிள்ளைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, ஆனைக்கோட்டை மற்றும் சாவக்காடு பகுதிகளைச் சேர்ந்த இரு தரப்புக்கு இடையில் கடன் கொடுக்கல் – வாங்கல் விவகாரம் நீடித்து வந்துள்ளது.

இது தொடர்பிலான வழக்கு விசாரணை மல்லாகம் நீதிமன்றத்திலும் நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனது பிள்ளைகளும் கணவரும் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுவதாக இருந்தால் பணத்தினைத் தரவேண்டும் என்று

தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்றதாகவும் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருக்கின்றார்.

சம்பவத்தை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையின் அடிப்படையில் தெல்லிப்பளையில் ஒரு வீட்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தந்தையும் பிள்ளைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவரை கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நபர் தனியார் தொலைத் தொடர்பு சேவை ஒன்றின் பணியாளர் என்றும் தெரியவந்துள்ளது.

செய்திகள்