13ம் திருத்தச்சட்டத்திற்க்கு எதிராக வவுனியாவில் பேரெழுச்சியுடன் அணிதிரள்வோம்

13ம் திருத்தச்சட்டத்திற்க்கு எதிராக வவுனியாவில் பேரெழுச்சியுடன் அணிதிரள்வோம்

ஒற்றையாட்சியை நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்தும் 13-03-2022 திகதிய வவுனியா பேரணிக்கான ஆதரவைக் கோருதல்.    

சிங்கள பௌத்த பேரினவாதஅரசு புதிய அரசியல் யாப்பினை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. சிறீலங்காவுக்கான நான்காவது அரசியல் யாப்பும் மிக இறுக்கமான சிங்கள பௌத்த ஆதிக்கத்தை கொண்ட ஒற்றையாட்சி அரசியல் யாப்பாகவே அமையவுள்ளது. இந்நிலையில் தமிழ்த் தரப்பின் கடமையானது ஒற்றையாட்சியை முற்றாக நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக கடந்த 34 வருடங்களாக நடைமுறையிலுள்ள, தோல்வியடைந்த, ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியுள்ளமையானது, தமிழ் மக்களின் எதிர்காலத்தை பேரினவாதத்திற்கு நிரந்தரமாக அடிமையாக்கும் சூழ்ச்சியாகும். இச்சதிமுயற்சியை முறியடிப்பதற்காக  விழிப்படைய வேண்டியது அனைத்து தமிழ் மக்களதும் வரலாற்றுக் கடமையாகும்.  

அந்த வகையில், வடக்கு கிழக்கிலுள்ள பொதுசன அமைப்புக்களையும், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் அரசியல் தரப்புக்களையும் இணைத்து – ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான 13ஆம் திருத்தத்தையும் முற்றாக நிராகரித்து – இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரித்த ;சமஸ்டி‘ அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி  கடந்த 30-01-2022 திகதியன்று யாழ் நல்லூர் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்ற பேரணி முடிவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கிட்டுப்பூங்கா பிரகடனம் செய்யப்பட்டது.  

அதன் தொடர்ச்சியாக  மேற்படி பிரகடனத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாகவும் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்குரிய நீதியை வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வலியுறுத்தியும், அரசியல் கைதிகளினுடைய விடுதலையை வேண்டியும், சிங்கள பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் எதிர்வரும் 13-03-2022 (ஞாயிற்றுக்கிழமை) பி.ப 2.00 மணியளவில் வவுனியா கச்சேரிக்கு அருகாமையிலுள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுத்தூபியிலிருந்து பேரணியாகச் சென்று தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தில்  (தாண்டிக்குளம் புகையிரத நிலையம் முன்பாக) இடம்பெறவுள்ளது.

மேற்படி ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதிக்கு எதிராக வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள மேற்படி போராட்டம் தொடர்பில் பொது மக்களுக்குத் தெளிவு படுத்தும் விழிப்புணர்வு செயற்பாடுகள் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்றது. அது பற்றிய செய்திகளை ஊடகங்களில் பிரசுரித்து ஒத்துழைக்குமாறு அன்புரிமையுடன் கோருகின்றோம்.

செல்வராசா கஜேந்திரன் (பா.உ)

பொதுச் செயலாளர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

செய்திகள் நிகழ்வுகள்