யாழ் இணுவில் பகுதியில் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற 40 வயதான குடும்பஸ்தர் அப்பகுதியில் நின்றவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த குடும்பஸ்தர் தூரத்தில் ரயில் வந்து கொண்டிருந்த போது தனது உடலை துணி ஒன்றினால் முடியபடி ரயில் தண்டவாளத்தில் படுத்ததை அவதானித்த அப்பகுதியில் நின்றவர்கள் அவரை தண்டவாளத்திலிருந்து இழுத்து எடுத்து காப்பாற்றியுள்ளனர். இதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை அயலில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று அன்பாக விசாரித்த போது அவர் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 2000ம் ஆண்டளவில் பிரான்ஸ் சென்று 2013ம் ஆண்டு திருமணமும் முடித்து 2 குழந்தைகளும் உள்ளார்கள் என தெரியவருகின்றது.
தான் திருமணம் முடிக்கும் முன்னர் இணுவில் பகுதியில் 30 பரப்பு காணி தனது உழைப்பில் வாங்கியதாகவும் அதனை அக்காவின் பெயரில் ‘அற்றோனிக் பவர்’ முடித்து கொடுத்திருந்ததாகவும் அவர் அங்குள்ளவர்களுக்கு தெரிவித்துள்ளார். திருமணம் முடித்த பின்னரும் அக்காவின் பெயரில் இருந்த காணியை தற்போது பார்வையிட வந்த போது காணி பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு விற்பனையாகியுள்ளதை அறிந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியுள்ள குடும்பஸ்தர் இது தொடர்பாக அக்காவிடம் விசாரணை செய்ய முற்பட்ட போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் அக்காவை தாக்கியுள்ளார் குடும்பஸ்தர். இதனையடுத்து அக்காவின் கணவர் மற்றும் பிள்ளைகளும் குடும்பஸ்தரை தாக்கியதுடன் பொலிசாரிடமும் முறையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த விரக்தியிலேயே தான் தற்கொலைக்கு முயன்றதாக அங்கிருந்தவர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். காணி 8 கோடி ரூபாவுக்கு அண்மையிலேயே விலைப்பட்டுள்ளதாகவும் காணி விலைப்பட்டது தனது மனைவி தெரியாது என்றும் அவர் அங்கு அழுதழுது குறிப்பிட்டுள்ளார். சொந்த சகோதரங்களே இவ்வாறான செயற்பாடுகளைச் செய்யும் நிலை வந்துள்ளதை புலம் பெயர் நாட்டில் உள்ளவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கா மற்றும் அக்காவின் கணவர் ஆகிய இருவரும் அரச ஊழியர்கள் எனவும் இவர்களின் ஒரு மகன் யாழ் பல்கலைக்கழக மாணவன் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.