ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை! – பிரித்தானியாவில் ஒருவர் கைது

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை! – பிரித்தானியாவில் ஒருவர் கைது

2000ஆம் ஆண்டு ஈழத்தில்  ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பிரித்தானியகாவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

20 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக Metropolitan காவல் துறை  போர்க்குற்ற விசாரணைக் குழு தகவல் கோரியிருந்தது.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் கடந்த 22ம் திகதி (செவ்வாய்க்கிழமை) நார்தாம்ப்டன்ஷையரில் 48 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளதாக Metropolitan காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001 இன் பிரிவு 51 இன் கீழ் குற்றங்கள் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைச் சம்பவம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கை மேற்ககொள்ளப்பட்டதாக Metropolitan காவல் துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நிமலராஜனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆதரவு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளுக்கு உதவக் கூடிய தகவல் தெரிந்தவர்கள் முன் வந்து நிமலராஜனின் குடும்பத்திற்கு நீதியை நிலைநாட்ட உதவுமாறு காவல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம்