குமரபுரம் படுகொலை. (11.02.1996 -11.02.2022)

குமரபுரம் படுகொலை. (11.02.1996 -11.02.2022)

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் குமரபுரம் என்ற இந்தக் கிராமம் இருக்கின்றது. திருகோணமலை மாவட்டத்தில் பாரதிபுரத்திற்கும் கிளிவெட்டிக்கும் இடையிலுள்ள இக்கிராமத்திலிருந்த குடும்பங்கள் பெரும்பாலும் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்களாவார்கள். குமரபுர கிராமத்தின் எல்லைகள் பின்வருமாறு கிழக்கு: பிரசித்தி பெற்ற நீர்ப்பாசனத் திட்டமாகிய அல்லைக்குளம் வடக்கு: இக்கிராமத்தின் வடக்கு எல்லையிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் ஒரு இராணுவ முகாம் இருக்கின்றது. மேற்கு: மேற்கு எல்லையில் ஒரு சிறிய விளையாட்டு மைதானமும் பாற்பண்ணையும் இருக்கின்றது. தெற்கு: இக்கிராமத்தின் தெற்கு எல்லை கிளிவெட்டித் துறைமுகமாகும்.

இது ஒரு விவசாய தமிழ்க் கிராமம் ஆகையால் இங்கு பெருமளவிலான ஓலைக்குடிசைகளும் ஆங்காங்கே சில கல்வீடுகளும் காணப்படுகின்றன. மூதூர் நகரத்திலிருந்து வெருகல்முகத்துவாரம் வரை நீண்டுசெல்லும் பிரதான வீதி இக்கிராமத்தின் ஊடாகவே ஊடறுத்துச் செல்லுகிறது. இங்கு பல இன மக்கள் வாழ்கின்ற போதிலும் அவர்களுக்கிடையிலான இன உறவுகள் பாதிப்படைந்திருக்கவில்லை. 1995ம் ஆண்டிற்குப் பின்னர் இராணுவக் கெடுபிடிகள் அதிகரித்திருந்ததன் காரணமாக மக்கள் இராணுவத்தினருக்கு அஞ்சி வாழும் நிலையேற்பட்டது. இவ்வாறான ஒரு இராணுவக் கெடுபிடியின் விளைவாகத்தான் 11.02.1996 அன்று இந்தப் படுகொலை சம்பவம் இடம்பெற்றது.

அன்று மாலை 4 மணியளவில் வெடிச்சத்தங்கள் கேட்டன. மக்கள் பயத்தால் இக்கிராமத்தின் கிழக்கு எல்லையான அல்லைக்குளத்திற்கு அருகே நெடுக உயர்ந்து அடர்த்தியாக வளர்ந்திருந்த கிளிக்கண்ணா மரக்கூடலுக்குள் ஒளிந்து கொண்டார்கள்; வேறு சிலர் வீட்டிலேயே இருந்தார்கள். அவ்வாறு வீட்டில் இருந்தவர்களில் அழகுதுரை என்பவரது வீட்டில் எட்டுப் பேர் இருந்தார்கள். அந்த எட்டுப் பேரும் இராணுவத்தால் வீட்டுக்குள்ளேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த ஊர்த் தலைவர் தமது சாட்சியத்தில் தன்னுடைய வீட்டில் தன்னுடன் கதைத்துக்கொண்டிருந்த இராசேந்திரம் கருணாகரன் என்பவர் தன் கண் முன்னாலேயே சூடுபட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைத் தான் பார்த்ததாகச் சொன்னார். இந்த இராணுவத்தினரின் அடாவடித்தனமான சூட்டில் தொழிலாளியான நாகராசா என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒரு கண்ணை முழுமையாக இழந்தார். மறுகண்ணில் பார்வைக் குறைபாட்டோடு இன்றும் அவர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.   இந்தப் படுகொலைச் சம்பவத்தின்போது தனது எட்டு வயதுச் சகோதரனான அன்ரனி ஜோசெப் என்ற சிறுவனை வீதிவழியாக கிளிவெட்டிக்கு சைக்கிளிற் கூட்டிக்கொண்டு சென்ற அருமைத்துரை தனலட்சுமி / கீதா என்ற பதினாறு வயதுப் பாடசாலை மாணவி துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு கடை ஒன்றுக்குள் தனது தம்பியுடன் தங்கியிருந்தபோது சிறிலங்கா இராணுவத்தினரால் வெளியே இழுத்துச் செல்லப்பட்டு ஒரு பாற்பண்ணைக் கட்டடத்துக்குள் வைத்து பல இராணுவச் சிப்பாய்களினால் பாலியல்வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார். கடைசியில் கோப்ரல் குமார் என்ற இராணுவச் சிப்பாய் அவரைத்தானே சுட்டுக்கொன்றதாக நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டார். ஏன் சுட்டுக்கொன்றாய் எனக் கேட்கப்பட்டபோது அந்தச் சிறுமி பல இராணுவச் சிப்பாய்களால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்ட போது உடம்பு முழுவதும் ககடிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடைகள் பல துண்டுகளாகக் கிழித்து வீசப்பட்டிருந்தன. அவள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தாள் அவளின் பரிதாபகரமான நிலையைப் பார்த்தே சுட்டேன் என்றான். இந்தப் படுகொலையின்போது எல்லாமாக இருபத்தாறு தமிழர்கள் ஆண், பெண் என்ற வேறுபாடின்றியும் முதியவர், குழந்தைகள் என்ற வேறுபாடின்றியும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இருபத்திரண்டு பேர் சுட்டுப் படுகாயப்படுத்தப்பட்டார்கள். இறந்த எல்லோருடைய மரண அத்தாட்சிப் பத்திரங்கள் துப்பாக்கிச் சூட்டு காயங்களினாலும் நீண்ட நேரம் உரிய சிகிச்சை அளிக்கப்படாது கவனிப்பாரற்று விடப்பட்டமையாலும் ஏற்பட்ட மரணங்களென எழுதப்பட்டிருந்தன. அப்போது மூதூர் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய பொன்னையா சுவர்ணராச் இம்மரணங்களை அத்தாச்சிப்படுத்தியுள்ளார். இந்த படுகொலை தொடர்பாக ஒன்பது படையினர் கைது செய்யப்பட்டார்கள். பத்து ஆண்டுகளாக இந்தக்கொலை தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்றில் நிலுவையிலுள்ளது. இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட சான்றுப் பொருட்களும் தடையப் பொருட்களும் மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் கொழும்பு அரசாங்க பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், அவையாவும் 2005ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தின் போது எரிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதே நீதித்துறை வட்டாரத்தில் எழுப்பப்படும் கேள்வியாகும். 11.02.1996 அன்று குமரபுரம் இனப்படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்: 01. இராமஜெயம்பிள்ளை காமலேஸ்வரன் (வயது 14 – மாணவன்) 02. இராசேந்திரம் கருணாகரன் 03. கனகராசா சபாபதிராசா (வயது 16 – கமம்) 04. கிட்டினர் கோவிந்தன் 05. பாக்கியராசா வசந்தினி 06. தங்கவேல் கலாதேவி (வயது 11 – மாணவி) 07. ஆனந்தன் அன்னம்மா (வயது 28) 08. அமிர்தலிங்கம் ரஜனிக்காந் 09. அழகுதுரை பரமேஸ்வரி (வயது 27) 10. அருமைத்துரை வள்ளிப்பிள்ளை 11. அருமைத்துரை தனலெட்சுமி (வயது 16 – மாணவி) 12. அருணாசலம் கமலாதேவி 13. அருணாசலம் தங்கவேல் 14. சோமு அன்னலட்சுமி 15. செல்லத்துரை பாக்கியராசா (வயது 26 – தொழிலாளி) 16. சுந்தரலிங்கம் பிரபாகரன் (வயது 13) 17. சுந்தரலிங்கம் சுபாசினி (வயது 04 – மாணவன்) 18. சுப்பிரமணியம் பாக்கியம் 19. சுப்பையா சேதுராசா (வயது 72 – தொழிலாளி) 20. சிவக்கொழுந்து சின்னத்துரை (வயது 58 – கமம்) 21. சிவபாக்கியம் பிரசாந்தினி 22. சண்முகநாதன் நிதாகரன் (வயது 11 – மாணவன்) 23. வடிவேல் நடராசா (வயது 27 – தொழிலாளி) 24. விநாயகமூர்த்தி சுதாகரன் (வயது 13 – மாணவன்)

காயமடைந்தோர் விபரம்: 01. இராசதுரை சாத்தியப்பிரியா (வயது 24 – சுயதொழில்) 02. இராசதுரை சின்னவன் 03. நாகராசா கிருபைராணி (வயது 35 – வீட்டுப்பணி) 04. நாகராசா சுதாகரன் 05. குலேந்திரன் தவமணிதேவி (வயது 24 – வீட்டுப்பணி) 06. கிட்ணன் (வயது 04) 07. கணபதிப்பிள்ளை நிரோஜன் (வயது 04 – குழந்தை) 08. கணபதிப்பிள்ளை குகதாசன் (வயது 12 – சிறுவன்) 09. கணபதிப்பிள்ளை குமுதினி 10. பாக்கியராசா (வயது 35) 11. பழனிவேல் யோகராணி 12. தம்பிப்பிள்ளை சிற்றம்பலம் 13. திருப்பதி மஞ்சுளா (வயது 12 – சிறுமி) 14. மாரிமுத்து செல்லாச்சியார் 15. மகேஸ்வரன் குவேந்தினி (வயது 06 – சிறுமி) 16. மகேஸ்வரன் வனஜா 17. அழகுதுரை சர்மி (வயது 12 – சிறுமி) 18. அரசரட்ணம் நாகராஜா 19. மோசஸ் அன்ரனி யோசப் (வயது 02 – குழந்தை) 20. சித்திரவேல் வேல்நாயகம் 21. சிற்றம்பலம் கோணேஸ்வரன் 22. ராஜா இன்பமலர் (வயது 24)

நினைவில்