முல்லைத்தீவில் இராணுவத்தின் வீதித் தடையால்   இடம்பெற்ற அனர்த்தம்

முல்லைத்தீவில் இராணுவத்தின் வீதித் தடையால் இடம்பெற்ற அனர்த்தம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீதித் தடைகளால் பொதுமக்கள் பாரிய இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர்

இது விடயமாக பலதடவைகள் சுட்டிக் காட்டப்பட்டபோதிலும் இன்று வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வீதியில் கருவேலன்கண்டல் என்ற பகுதியில் இராணுவத்தினரால் போடப்பட்டுள்ள வீதித்தடையில் மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீதிகளில் 5 கிலோமீற்றருக்கு ஒரு வீதித்தடையினை படையினர் ஏற்படுத்தியுள்ளார்கள். அதிகளவான வீதித்தடைகள் காணப்படும் மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் திகழ்கிறது.

சில இடங்களில் இராணுவத்தினரின் வீதித்தடைகளுக்குள் பேருந்து தரிப்பிடங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் திம்பிலி பகுதியிலும் றெட்பானா சந்திப்பகுதியிலும் இராணுவத்தினரின் வீதி சோதனை தடைக்குள் பேருந்து தரிப்பிடங்கள் காணப்படுகின்றன.

வீதிகளில் போக்குவரத்து செய்வதில் பாரிய இடர்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் தெரிவித்துள்ள போதும் வீதி தடைகள் தளர்வடைவதாக தெரியவில்லை.

இந்நிலையில் இன்று இரவு ஒட்டுசுட்டான் வீதியில் உந்துருளியில் பயணித்த நபர் ஒருவர் கருவேலன்கண்டல் பகுதியில் உள்ள இராணுவத்தினரின் வீதித்தடையில் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகளை ஒட்டுசுட்டான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   

செய்திகள்