விடுதலைப் புலிகள் மாகாண சபை முறைமையை தற்காலிக தீர்வாக ஒருபோதும்  ஏற்கவில்லை!

விடுதலைப் புலிகள் மாகாண சபை முறைமையை தற்காலிக தீர்வாக ஒருபோதும் ஏற்கவில்லை!

வரதராஜப் பெருமாள் தலைமையில் அப்போது இயங்கிய மாகாண சபை கலைக்கப்பட வேண்டும், தனிநாட்டுக் கோரிக்கையை தடை செய்யும் ஆறாம் திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும், வடக்கு – கிழக்கு இணைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு ஆகிய மூன்றையும் பிரேமதாச ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தினால் மட்டும், மாகாண சபைத் தேர்தலுக்கு முகம் கொடுக்க விடுதலைப் புலிகள் தயார் என்று அன்ரன் பாலசிங்கம் தெரிவித்தது, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார் என்ற அர்த்தப்படுத்தலில் அல்ல என்பதற்கு 1989ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு அவர்கள் முகம் கொடுத்த வழிமுறையை நோக்க வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் இதனை தற்காலிகத் தீர்வாக அவர் குறிப்பிடவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். 

எழுபத்திநான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிலோன் என்று உலகளாவிய ரீதியில் பிரபல்யமாகவிருந்த இலங்கை என்ற குட்டித்தீவுக்கு, புதிய அரசியலமைப்பொன்றினூடாக சிறீலங்கா என்று பெயர் சூட்டி, சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் உலகின் முதலாவது பெண் பிரதமர் என்று பெருமைபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்க. 

இனவேறுபாட்டை உச்சத்துக்கு எடுத்துச் சென்ற இந்த அரசியலமைப்பின் உருவாக்கத்துக்கு முன்பலமாகவும் பின்புலமாகவும் இருந்தவர்கள் இடதுசாரிகள். லங்கா சமசமாஜ கட்சியின் மூத்த தலைவரான கொல்வின் ஆர்.டி.சில்வாவே சிறீலங்கா அரசியலமைப்பின் பிதாமகர். 

சிறீலங்கா அரசியலமைப்பின் ஐம்பதாவது ஆண்டும், பிரித்தானியர் சிங்களவருக்கு அள்ளிக் கொடுத்த சுதந்திரத்தின் எழுபத்திநான்காவது ஆண்டுப் பூர்த்தியும் இந்த மாதம் நான்காம் திகதி, சிங்கள பௌத்த கலாசாரத்தையும், தனிச்சிங்கள ஆயுதப்படையின் வல்லாதிக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்பட்டது. 

தமிழினத்தை இதுவரை கருவறுத்தது போதாதென்று, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்களின் இருப்பையே நிர்மூலமாக்கும் காணி அபகரிப்பு, ராணுவ அத்துமீறல், சிங்களக் குடியேற்றம், வழிபாட்டு உரிமை மறுப்பு போன்ற வன்முறைகளை மேற்கொண்டு வரும் அரச இயந்திரம் அதனையே தனது சுதந்திர தின விழாவிலும் நிலைநாட்டியுள்ளது. 

இதற்கான சிறு உதாரணமாக, இத்தினத்தில் ராணுவத்திலுள்ள 480 அதிகாரிகளுக்கும், 8,034 சிப்பாய்களுக்குமாக மொத்தம் 8,314 படையினருக்கு கோதபாய ராஜபக்ச வழங்கிய பதவியுயர்வை காணலாம். போர்க்குற்றம் புரிந்த பல ராணுவத்தினர் இப்போது ஆட்சி நிர்வாகத்தில் உள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா இவர்களுள் மூப்பர்கள். 

2019 ஆகஸ்ட் 19ம் திகதி ராணுவத் தளபதியாக பதவியேற்ற சவேந்திர சில்வாவின் சிபார்சில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 4,341 அதிகாரிகளும், 86,471 இளந்தரத்தினருமாக 98,471 ராணுவத்தினருக்குப் பதவியுயர்வு வழங்கப்பட்டதனூடாக இலங்கையில் இப்போது எவ்வகை ஆட்சி நடைபெறுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். 

தாங்கள் பெற்ற சுதந்திரத்தை சிங்கள தேசம் எவ்வளவு தந்திரமாக நிர்வகித்து, தமிழர் தேசத்தை அபகரித்து வருகின்றதென்பதற்கு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட 1987 ஆண்டின் முன்-பின் காலங்களை ஒப்பு நோக்கலாம். இரு நாட்டுத் தலைவர்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் இலங்கையின் அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தமே, மாகாணசபை முறைமையை அறிமுகம் செய்தது. ராஜீவ் காந்தியையும் ஈழத்தமிழரையும் ஒரே கல்லில் வீழ்த்துவதற்கு ஜே.ஆர். ஜெயவர்த்தன இதனையே ஆயுதமாக பயன்படுத்தினார். 

ஆனால், இதனைப் புரிந்து கொள்ளாத ராஜீவ் காந்தி கொழும்பில் ஒப்பந்தம் செய்த பின்னர் புதுடில்லி திரும்பும் வழியில் சென்னையில் மாபெரும் கூட்டமொன்றில் வெற்றிஉரை நிகழ்த்த விரும்பினார். அப்போது முதலமைச்சராகவிருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் உடன்படாத நிலையில், சட்டசபை கலைக்கப்படுமென்று அச்சுறுத்தி, மரீனா கரையில் கூட்டத்தை ஏற்பாடு செய்வித்து அதில் உரையாற்றுகையில் ‚தமிழ்நாடு மக்கள் அனுபவிக்கும் உரிமைகளிலும் கூடுதலான உரிமைகளை இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்துவிட்டு உங்கள் முன்னால் நிற்கிறேன்“ என்று கூறி, தமது முதுகைத் தாமே தட்டிக் கொடுத்து சபாஸ் போட்டார். 

முப்பத்திநான்கு ஆண்டுகள் தாண்டியும் அதே மாகாண சபையே, இழுத்துப் பறித்து இயங்காத நிலையிலும் இன்றும்கூட பேசுபொருளாக உள்ளது. அண்மைய நாட்களில் இதுவே மேலும் வலுப்பெற்ற களமாக மாறியுள்ளது. இதற்கான முக்கிய தளமாக ஆறு தமிழ்க்கட்சிகளின் தலைமைகள் ஒப்பமிட்டு இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதமும், தனித்து ஒரு தமிழ்க் கட்சி இதனை மறுதலித்து ஆரம்பித்திருக்கும் போராட்டமும் அமைந்துள்ளது. 

பதின்மூன்றாவது திருத்தத்தை – மாகாண சபை நிர்வாகத்தை பூரணமாக அமல்படுத்தக் கோரும் ஆறு தமிழ்க் கட்சிகள் ஒப்பமிட்ட கடிதத்தில், இன்னொரு ஒப்பமும் உண்டு. இலங்கைத் தேர்தல் சட்டத்தில் அரசியல் கட்சியாக இல்லாத கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் இதில் ஒப்பமிட்டுள்ளார். ஒப்பமிட்ட ஆறு கட்சிகளின் தலைவர்களில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், விக்னேஸ்வரன் ஆகிய மூவர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள். எதிரணியிலுள்ள மக்கள் முன்னணியின் தலைவர்களான கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் நாடாளுமன்ற உறுப்பினர்கள். தமிழரசுக் கட்சியின் எம்.பியான சிவஞானம் சிறீதரன் பதின்மூன்றாம் திருத்தத்தை தாம் ஏற்கவில்லையென்று பகிரங்கமாகக் கூறியுள்ளதை கவனத்தில் எடுப்பின், கூட்டமைப்புக்குள் இது விடயத்தில் ஒரே கருத்தில்லை என்பதை அறியலாம். 

இவற்றுக்கு அப்பால், மாகாண சபை முறைமையை விடுதலைப் புலிகள் ஏற்றார்கள் என்றும், இதனை ஒரு இடைக்காலத் தீர்வாக முன்னிறுத்தி இதற்கான தேர்தலில் அவர்கள் போட்டியிட விரும்பினார்கள் என்றும் ஒரு கருத்து இப்போது பரவலாக ஓடித் திரிகிறது. ஐரோப்பாவில் சமூக ஊடகமொன்றில் பிரான்ஸ் நாட்டு தமிழர் ஒருவர் இக்கருத்தைத் தெரிவித்ததாகவும், இதற்கு உசாத்துணையாக விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவிருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மனைவி அடேல் பாலசிங்கம் எழுதிய சுதந்திர வேட்கை (The Will to Freedom) என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம்) என்ற நூலும் காட்டப்பட்டுள்ளது. 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் முதலாவதாக பகிரங்கமாகத் தோன்றிய சுதுமலை கூட்டத்தில் உரையாற்றும்போது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கவில்லை – இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் எம்மீது திணிப்பதற்கு இந்திய அரசு கங்கணம் கட்டிவிட்டது. எமது அரசியல் தீர்வை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட இந்திய அரசு நிச்சயிக்க முடிவு செய்துவிட்டது – என்று தமதுரையில் இவர் சுட்டியதை இங்கு மீள்நினைவுக்கு உட்படுத்துவது அவசியம். 

ஜே.ஆருக்குப் பின்னர் ஜனாதிபதியாக வந்த பிரேமதாசவுடன், 1989 காலப்பகுதியில் அன்ரன் பாலசிங்கம் தலைமையில் விடுதலைப் புலிகளின் உயர்மட்டக்குழு கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தியது. இக்காலத்திலேயே தமது கணவருடன் தாம் தனியாக இருக்கும்போது கேட்டதையும், அவர் சொன்னதையும் தமது நூலில் அடேல் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். 

ஆங்கில நூலில் 256, 257ம் பக்கங்களில் குறிப்பிட்ட விடயத்தை தமிழ் நூலின் 341ம் பக்கத்தில் அடேல் பாலசிங்கம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்: ‚பிரேமதாச அவர்கள் முட்டுக்கட்டைகளை நீக்கினால், அதாவது மாகாண சபையை கலைத்து, ஆறாவது சட்டத்திருத்தத்தைக் கைவிட்டு, புதிய தேர்தல்களை நடத்தினால், வடக்கு – கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களுக்கு முகங்கொடுக்க விடுதலைப் புலிகள் முழுமையாக தயாராக இருக்கிறார்கள் என்று கூறினார்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில நூலில் பின்வருமாறு இது குறிப்பிடப்பட்டுள்ளது:

L.T.T.E. WAS DEADLY SERIOUS ABOUT FACING THE PROVINCIAL COUNCIL ELECTIONS IN THE NORTH – EAST IF PREMADASA CLEARED THE HURDLES I.E. DISOLVING THE COUNCIL, REPEALING THE SIXTH AMENDMENT AND HOLDING FRESH ELECTIONS. 

இதன் தொடர்ச்சியாக 1989 டிசம்பர் 17ம் திகதி அன்ரன் பாலசிங்கம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் ஒரு விடயத்தை தெரிவித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதை எதிர்ப்பதாகவும், அதனையும் பிரேமதாச நீக்க வேண்டுமென வலியுறுத்திக் கூறினார். 

ஆக, இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ஒன்றுண்டு: வரதராஜப் பெருமாள் தலைமையில் அப்போது இயங்கிய மாகாண சபை கலைக்கப்பட வேண்டும், தனிநாட்டுக் கோரிக்கையை தடை செய்யும் ஆறாம் திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும், வடக்கு – கிழக்கு இணைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு ஆகிய மூன்றையும் பிரேமதாச ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தினால் மட்டும், மாகாண சபைத் தேர்தலுக்கு ஷமுகம்| கொடுக்க விடுதலைப் புலிகள் தயார் என்பதே அன்ரன் பாலசிங்கம் தெரிவித்தது. எந்தச் சந்தர்ப்பத்திலும் இதனை தற்காலிகத் தீர்வாக அவர் குறிப்பிடவில்லையென்பதை கவனிக்க வேண்டும். 

முகம்| கொடுக்கத் தயார் என்பதற்கான ஆங்கிலப் பதமாக Prpared to facing the election என்று அவர் தெரிவித்ததை ஆங்கில நூல் அறியத்தருகிறது. விடுதலைப் புலிகள் ஷமுகம்| கொடுக்கத் தயார் என்பது, தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர்கள் தயார் என்று அர்த்தப்படாது என்பதற்கு 1989ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி இடம்பெற்ற இலங்கையின் பொதுத்தேர்தலை பார்க்க வேண்டும். 

இதற்கு முன்னைய பொதுத்தேர்தல்களை விடுதலைப் புலிகள் ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்ததால், அரசாங்கத்துக்கு ஆதரவான தமிழ்க் கட்சியொன்று மிகக்குறைந்த வாக்குகளோடு தமிழர் தாயகத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தடுப்பதற்கு அடுத்த தேர்தலில் ஷமுகம்| கொடுக்க தாங்கள் தயார் என்று விடுதலைப் புலிகள் அறிவித்தனர். 

அதன்படி 1989ம் ஆண்டுத் தேர்தலில் தங்களுடன் ஒத்துப்போன ஈரோஸ் இயக்கத்தினரை களமிறக்கி, 229,872 வாக்குகளை அவர்கள் பெறும் சூழலை உருவாக்கி, 13 வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து, அரச தரப்பின் ஆதரவு அணியினரை தோல்வியடையச் செய்தனர். 

அதேபோன்று, 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையும் விடுதலைப் புலிகள் வேறொரு பாணியில் ஷமுகம்| கொடுத்தனர். எவ்வாறு? மக்கள் தாமாகச் சிந்தித்து வாக்களிக்கலாம் என்று இவர்கள் விடுத்த அறிவிப்பால் வடக்கில் 1.2 வீதமான மக்களே வாக்களித்தனர். தமிழ் மக்களின் வாக்கு தமக்கே கிடைக்குமென்ற நம்பிக்கையில் இருந்த ரணில் விக்கிரமசிங்க எதிர்பாராத தோல்வி கண்டார். இதனை மனதில் இருத்தியே இப்போதும் விடுதலைப் புலிகளே தம்மைத் தோற்கடித்ததாக அவர் கூறிவருவதைக் காண்கிறோம். விடுதலைப் புலிகள் இத்தேர்தலுக்கு இப்படித்தான் ஷமுகம்| கொடுத்தனர். 

விடுதலைப் புலிகள் மாகாண சபை முறைமையை எப்போதாவது ஏற்றிருந்தால், 2006ல் வடக்கு – கிழக்கு மாகாண சபையை இரண்டாக இலங்கை அரசு பிரித்தபோது அதனைக் கண்டித்திருக்க வேண்டும். அதன்பின்னர், கிழக்கு மாகாண சபைக்கு தனித்து தேர்தல் நடைபெற்றபோது, 1989ல் ஈரோஸ் அணியை தேர்தலில் ஆதரித்ததுபோல இங்கும் தங்களுடன் இணைந்து போகக்கூடிய ஓர் அணியை களத்தில் இறக்கியிருக்கலாம். ஆனால், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. 

இதனூடாக, விடுதலைப் புலிகள் மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டதாகவும், இடைக்காலத் தீர்வாக அதனைப் பார்த்ததாகவும் அர்த்தம் கொள்ள முடியாது என்பது புலனாகிறது. 2004ம் ஆண்டு இலங்கை அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தையின் போதே இடைக்கால நிர்வாகம் ஒன்றுக்கு விடுதலைப் புலிகள் பச்சைக்கொடி காட்டினராயினும், அப்போது ஜனாதிபதியாகவிருந்த சந்திரிகா குமாரதுங்கவினால் அது முறியடிக்கப்பட்டது என்பது வரலாறு. 

காலம் வேகமாக விரைகின்ற வேளையில், விடுதலைப் போர்க்கால நிகழ்வுகளுக்கு திரிவுபட்ட அர்த்தங்களை விரிப்பதும், எழுதப்பட்ட வரிகளுக்கிடையில் தொக்கி நிற்கும் எழுதப்படாத விடயங்களை தப்பாகப் புரிந்து கொண்டு கருத்துரைப்பதும், வரலாற்று உண்மைகளை மாற்றி அமைத்துவிடும் அபாயமான சமிக்ஞை என்பதை உணர்ந்து செயற்படுவது நிகழ்காலத்தின் கடமை.  

செய்திகள்