“புலம்பெயர் தமிழர்களுக்கு புகழாரம்”! சிவஞானம் சிறீதரன்.

“புலம்பெயர் தமிழர்களுக்கு புகழாரம்”! சிவஞானம் சிறீதரன்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக சகலவற்றையும் இழந்து நிற்கும் தமிழ் இனத்தை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டிய கால கட்டத்தில் அனைவரும் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

எனினும், புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் தம்மால் இயன்றளவு வளங்களைப் பயன்படுத்தி ஈழ மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருவதாகவும் முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

“உலகப் பந்தில் முகவரியை இழந்து, ஒரு தேசத்தின் கட்டுமானங்களையும் இழந்து வாழ்க்கையினுடைய அகல ஆழங்களையும் தேடிக்கொண்டிருக்கின்ற ஒரு சுதேசிய இனமான நாங்கள் இருக்கிறோம்.

தற்போது பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப வேண்டிய காலகட்டத்துக்குள் நாங்கள் நிற்கின்றோம்.

இன்று அரசியல் வாழ்வில் கூட கௌரவமான, நியாயமான, நேர்மையான நிலைகளிலிருந்து பின்தள்ளப்பட்டிருக்கின்றோம். இந்தத் தீவில் தேசிய இனமாகிய தமிழ்தேசிய இனத்தினுடைய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வேண்டிய சமூகக் கடமையும், பொறுப்பும் எங்களிடம் இருக்கின்றது.

இந்தப் பொருளாதாரத்தை கட்டி வளர்ப்பதில் உலகளவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.

தங்களால் இயன்ற பொருளாதார வளங்களை, வல்லமைகளைப் பயன்படுத்தி இங்கு வாழும் மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி வருவதை நாங்கள் காண்கின்றோம். ஈழத் தமிழர்களின் வாழ்வு புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

இன்னும் சுதந்திரமான வாழ்வு இல்லை. இலக்கு நோக்கிப் பயணிக்கக் கூடிய சக்தி வாய்ந்தவர்களாக நாங்கள் இல்லை. கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நாங்கள் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும்“ என்றார்.

Uncategorized