இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான தடை.

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான தடை.

ஏனைய நாடுகளில் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ள இலங்கையின் சில இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கலாக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் தடைவிதிப்பதற்கு ஏன் காலதாமதமாகின்றது என பிரித்தானியாவில் இயங்கும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் எலியற் கொல்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரித்தானியாவில் வாழும் பரந்த அளவிலான மற்றும் செல்வாக்குமிக்க தமிழ்ச்சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டுமெனில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகத் தடைவிதிக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டிய கட்டளை வழங்கும் அதிகாரத்திலிருந்த இராணுவ ஜெனரல்களுக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் சர்வதேச மெக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் தடைவிதிக்கவேண்டும் என்று அண்மையில் 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியிருந்தன.

அதுமாத்திரமன்றி இவ்வாண்டு பிரித்தானியாவின் பேர்மிங்கில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியில் பங்கேற்பதற்காக முன்னாள் இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரிய தனது அணியுடன் பிரித்தானியாவிற்கு வருகைதரும்பட்சத்தில்,

சர்வதேச சட்டவரம்பின்கீழ் அவரைக் கைதுசெய்து விசாரணையை ஆரம்பிப்பதொன்றே தற்போது பிரித்தானியா செய்யக்கூடிய மிகக்குறைந்தபட்ச நடவடிக்கையாகும் என்றும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச மெக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் இலங்கை தொடர்பில் பிரித்தானியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானியா