இலங்கைத் தமிழரின் நீடித்த பிரச்சினைக்கு இந்தியத் தீர்வா?

இலங்கைத் தமிழரின் நீடித்த பிரச்சினைக்கு இந்தியத் தீர்வா?

இந்தியாவினால் இலங்கைத் தமிழரின் நீடித்த பிரச்சனைக்கு தீர்வு வழங்க முடியாது என ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மௌலவி. முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கல்முனையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“ மாகாண சபை முறைமை இந்தியாவின் தன்னலத்திற்காக கொண்டுவரப்பட்டதே அன்றி முஸ்லிம் மக்களின் எதுவித கருத்துக்களும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

13 ஆவது அரசியல் சீர்திருத்தமானது இந்நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய இனப்பிரச்சினைக்காக இந்தியாவினால் திணிக்கப்பட்ட ஒன்றாகும்.

அந்த வகையில் தமிழ் கட்சிகள் சில இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதாகக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றார்கள். இந்தக் கடிதம் தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அக்கறையுடன் செயற்படுவதை காண்கின்றோம்.

இதற்கு எதிராக எமது கட்சி கண்டனங்களை தெரிவித்திருந்தது. மேற்படி கடிதமானது இந்தியாவிற்கு அனுப்பப்படுமா அல்லது அவர்களுக்கு கிடைக்குமா என்பது வேறுபிரச்சினை.

இக்கடித செயற்பாட்டினை முன்னெடுப்பவர்கள் தமிழ் பேசும் மக்களை ஏமாற்றுவதற்கும் தங்களது வாக்கு வங்கிகள் சரியாமல் பாதுகாப்பதற்குமே இவ்வாறு செயற்படுகின்றார்கள்.

எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு எமது நாட்டில் தான் தீர்வு காண வேண்டும். முதலில் வடக்கு கிழக்கில் வாழகின்ற இரு இனங்களும் ஒற்றுமைப்பட வேண்டும்.

இந்தியாவிற்கு கடிதம் அனுப்புவதோ அல்லது ஐக்கிய நாடுகளுக்கு கடிதம் அனுப்புவதற்கு முன்னர் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்றார்.

இந்தியா செய்திகள்