3 ஆம் அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பது வரலாற்றுத் துரோகம்.

3 ஆம் அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பது வரலாற்றுத் துரோகம்.

தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு இறுதியான, உறுதியான தீர்வு என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையும் தெளிவும் உண்டு. எமது நிலைப்பாட்டை எமது எதிரி மட்டுமன்றி முழு உலகமும் நன்கறியும்.”

அன்பார்ந்த தமிழீழ மக்களே,
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது மேலுள்ள கூற்றினை மீள் நினைவு கொள்ளுதல் காலத்தின் தேவையெனக் கருதுகின்றோம். இலங்கையில் நிலவிவரும் இருவேறு தேசிய இனங்களுக்கிடையிலான தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு முடிவான அரசியல் தீர்வு உண்டெனில் அது தமிழீழத் தனியரசு ஒன்றுதான் என்பதனை சிறீலங்கா சிங்கள அரசு மட்டுமல்ல உலகின் அனைத்து நாடுகளும் நன்கறியும்.

ஆனால் தமிழ்த் தேசியத்தினை தமது கட்சிகளின் பெயராகக் கொண்ட தமிழ்க் கட்சிகள் மட்டும் சிங்கள இனவெறி அரசின் ஒற்றையாட்சித் திட்டத்திற்கு வலுச் சேர்ப்பவர்களாக மாறியுள்ளார்கள். அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபடப் போவதாகத் தெரிவித்து பேச்சுவார்த்தை நாடகங்களை தமக்குள் அரங்கேற்றியவர்கள், இறுதியாக ஒன்றிணைந்த தமிழ்க்கட்சிகளின் கோரிக்கையென வெளிப்படுத்தி 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்துமாறு இந்திய மத்திய அரசிற்கு கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார்கள்.

சிறிலங்காஆக்கிரமிப்பு இராணுவம் இன்றும் தமிழின அழிப்பை மேற்கொண்டு எமது இனத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக எழுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழின அழிப்பிற்கான நீதிகோரலையும் ஒற்றையாட்சி அரசியல் யாப்பிற்குள் ஒடுக்க கையொப்பமிட்ட இரா.சம்மந்தன (MP- TNA),  

மாவை சேனாதிராஜா (ITAK,TNA), 

சீ.வீ.விக்னேஸ்வரன்(MP-TMK,TMTK) ,

 செல்வம் அடைக்கலநாதன் ; (MP- TELO,TNA) , 

தர்மலிங்கம் சித்தார்த்தன்; (MP-DPLF,TNA), 

சுரேஷ் பிரேமச்சந்திரன் ; (EPRLF,TMTK) , 

ந.சிறீகாந்தா (TNP,TMTK)   

ஆகியோரதும் அவர்களது கட்சிகளினதும் வரலாற்றுத் துரோகத்தை என்றும் எமது மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.

1972 இல் இலங்கை ஓர் ஒற்றையாட்சி நாடு என வரையப்பட்ட முதலாவது குடியரசு அரசியல் திட்டத்தின் பின்பு, 1974 ஆம் ஆண்டிலேயே தமிழீழம் எனும் தனியரசுக்கான கோரிக்கை தமிழ் மக்களிடம் வலுப்பெற ஆரம்பித்து விட்டது. தமிழர்களது தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி, கூட்டாட்சி என பல்வேறு வகையான தீர்வுகள் இருந்த போதிலும் இவை எதனையும் வழங்காது தொடர்ந்தும் இன அழிப்பினை கட்டவிழ்த்துவிட்டு, தமிழர்களை தனிநாட்டுக் கோரிக்கையின்பாற் தள்ளியது சிங்கள இனவெறி அரசே.1977 ஆம் ஆண்டு ஒரு பொதுத்தேர்தல் மூலம் தமிழ்மக்கள் தாம் விரும்புவது தனித் தமிழீழ அரசென்பதனை மிகத் தெளிவாகக் கூறிவிட்டனர். இந்த முழுமையான ஜனநாயகத் தீர்வினை மதித்து ஏற்றுக் கொண்டவர்கள் யார் என்பதை அன்பானவர்களே புரிந்து கொள்ளுங்கள். ஜனநாயகத்தை விரும்பும் அல்லது மற்றவர்களுக்கு போதிக்கும் எந்தச் சக்தியும் தமிழீழக் கோரிக்கையினை அங்கீகரிப்பதே ஜனநாயக ஒழுங்காகும்.

ஈழத்தமிழர்களது இந்த ஜனநாயக விருப்பினை மதியாது சிங்கள இனவெறி அரசின் ஒற்றையாட்சித் திட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதோடு, 13ஆவது திருத்தச் சட்டத்தினை நியாயப்படுத்தும் நோக்கில் எமது மக்கள் மத்தியில் தமிழ்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரத்தினையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தேசிய இனங்களின் விடுதலைக்கான குரலை எந்த சக்திகளாலும், துரோகங்களாலும், அடக்கவோ, வெல்லவோ முடிவதில்லை. எமது தாயக மக்கள் இவர்களின் போலித் தேசியவாதத்தைத் தோலுரித்துத் தேசத்தின் உரிமையை விரைவில் நிலைநாட்டுவார்கள்.

பல கட்சிகள் இணைந்து கையொப்பமிட்டுக் கோரும் 13ஆவது திருத்தத்தை அன்னிய, சிறிலங்கா அரசுகள் ஏகோபித்த தமிழ் மக்களின் சனநாயக விருப்பாகக்காட்டி சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியல் சதிக்குள் எமது அரசியல் உரிமையை நிலைநிறுத்த முயலும் துரோக நடவடிக்கையை எதிர்த்துத் தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்கள் ஒன்றிணைந்து ஓரணியாக போராடவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அத்தோடு கையொப்பமிட்டவர்களும் இவர்சார்ந்தவர்களும் நாம் வாழும் நாடுகளுக்கு வரும்போது காத்திரமான எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவிப்பதோடு, வரலாற்றுப் பேராபத்திலிருந்து எமது தேசத்தை மீட்கும் போராட்டங்களில் பலமான அணியாக இணைந்து பங்கெடுக்குமாறு உரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.
நன்றி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

செய்திகள்